பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் – வீட்டுக்கு வரவழைத்து தர்ம அடி!
சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக வீடியோ மெஸேஜ்களை அனுப்பிய நபரை வீட்டுக்கு வரவழைத்து போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அந்த பெண் கணவரை பிரிந்து தன் தாய்வீட்டில் வாழ்பவர். அந்த பெண்ணுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபரிடமிருந்து கடந்த 4ஆம் தேதி முதல் அழைப்புகளும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோக்களும் வெவ்வேறு நம்பர்களில் இருந்து வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் தாயாரிடம் இதுபற்றி சொல்லியுள்ளார்.
அவரது தாயார் மர்மநபரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அந்த நபரை வீட்டுக்கு வரும்படி சொல்லுமாறு தன் மகளுக்கு சொல்லியுள்ளார். அதன்படியே அந்த மகள் சொல்ல, அந்த நபரும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்து அவரைப் பிடித்து தர்ம அடி அடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் அவர் திருத்தணியை சேர்ந்த விமல்ராஜ் என்பதும் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.