கடனுக்கு பதிலாக கிட்னி ; ஏழைத் தொழிலாளி மீட்பு : ஈரோட்டில் பரபரப்பு
கந்து வட்டி வாங்கிய ஏழைத்தொழிலாளியின் கிட்னியை எடுக்க முயன்ற கும்பலின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் இரு குழந்தைகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும், குழந்தைகளின் தாய் சுப்புலட்சுமியும் மரணம் அடைந்தனர். சுப்புலட்சுமியின் கணவர் இசக்கிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த நெசவுத் தொழிலாளி ரவி என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஒருவரிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், ஏழ்மை காரணமாக அவரால் அந்த பணத்தை திருப்பித் தர முடியவில்லை. எனவே, அவினாசியை சேர்ந்த சிலர், கடனுக்கு பதிலாக உன் சிறுநீரகத்தை கொடு எனக்கூறி, அவரை கேரளாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, இன்று காலை ரவியின் மனைவி சம்பூர்ணம், ஈரோடு கலெக்டரிம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அந்த புகாரை கலெக்டர் அனுப்பினார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கேரளாவில் ரவிக்கு நடத்த இருந்த அறுவை சிகிச்சையை தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.