வீட்டுக்கு அழைத்து பெண்ணின் மனதை மாற்றிய பெற்றோர் – விரக்தியில் கணவன் எடுத்த முடிவு !
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை மணமகளின் பெற்றோர் சமாதானம் பேசுவது போல வீட்டுக்கு அழைத்து பிரித்ததால் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த் தனுஷ்கோடி என்ற இளைஞருக்கும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பென்னி என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதற்கு பென்னியின் வீட்டில் சம்மதிக்காததால் அவர்கள் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு கள்ளக்குறிச்சியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பென்னியின் குடும்பத்தார் தம்பதிகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர். இதனால் தம்பதிகள் சந்தோஷமாக சென்று அங்கு சில நாட்கள் தங்கியுள்ளனர்.
ஆனால் அங்கிருந்து கிளம்பும்போது கணவன் தனுஷ்கோடியுடன் பென்னியை அனுப்ப மறுத்துள்ளனர். கேட்டதற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் சொல்லியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தனுஷ் தனது தந்தையிடம் போனில் பேசிய போது பென்னியின் பெற்றோர் தங்களை பிரிக்க நினைப்பதாக சொல்லியுள்ளார்.
அதன் பின் இருநாட்களாக தனுஷ் வீட்டுக்கு வரவில்லை. இதனை அடுத்து போலிஸுக்கு புகார் கொடுத்து அவரைத் தேடுய பெற்றோர் சின்னசேலம் ரயில்வே தண்டவாளத்தில் அவரை சடலமாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.