வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (15:21 IST)

திருமண மண்டபத்தில் கைவரிசை..! தங்க நகை திருடிய நபர் கைது..!!

arrest
கோவை அருகே திருமண மண்டபத்தில் தங்க நகை திருடிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 
கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில்  கடந்த மாதம் 8"ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் மர்ம நபர் ஒருவர்  5"சவரன் நகையை திருடி உள்ளார். 
 
இதுகுறித்து திருமண வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை கைப்பற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
 
இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருமண மண்டபத்தில் நகை திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. 
 
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற மணி என்பதும் கோவை பீளமேடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து 5 சவரன் நகையை மீட்ட போலீசார், அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.