பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய தயார்: மக்கள் நீதி மய்யம் அறிக்கை
கோவை மேற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு சவால் விட்டிருந்தார்
கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் நேரடியாக விவாதம் செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு விவாதம் செய்தால் தான் யாருக்கும் நிர்வாக திறன் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த சவாலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் விவாதத்திற்கு அழைத்து உள்ளார். விவாதம் செய்தால் தான் யாருக்கு நிர்வாகத் திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்
அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பாஜக அமைச்சர்கள் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளலாம்
மாண்புமிகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். ஏற்கனவே இரு முறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு இப்போது மூன்றாவது முறையாக தோற்க தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவரணி போதும்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.