1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:02 IST)

திமுகவை வெளுத்த சீமான்: அதிமுகவின் பழைய பாசம் காரணமா?

அதிமுக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கும் திமுகவினர் அவர்கள் ஆட்சி காலத்தில் வெள்ளை அறிக்கை ஏதாவது கொடுத்தார்களா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதை விமர்சித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ”முதல்வர் அமைச்சர்களோடு சுற்றுலா பயணம் போய் வந்திருக்கிறார். அவர் முதலீடுகளை ஈர்க்கவில்லை. அப்படி செய்திருந்தால் வெள்ளை அறிக்கை தரட்டும் விழா எடுக்கிறோம்” என்று பேசியிருந்தார்.

இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் ஈர்த்த முதலீடுகள் குறித்து கேள்வி கேட்கும் தி.மு.கவினர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எத்தனை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை பெரும் நிறுவன முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், இந்திய அரசு விவசாயத்தை விடுத்து தொழில் வளர்ச்சிகுறித்து பேசுவது பேராபத்துக்கு வழிவகுக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.

அந்நிய முதலீடுகளை ஒழித்து தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்க வேண்டுமென கூட்டங்கள் அனைத்திலும் பேசி வருபவர் சீமான். ஆனால் அவர் முதல்வர் அன்னிய தொழில் முதலீட்டார்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதை எதிர்த்து பேசாமல், அதுகுறித்து கேள்வி கேட்ட தி.மு.கவை விமர்சித்திருப்பது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. இலங்கை தமிழர் படுகொலை பிரச்சினையின்போது ஆளும் கட்சியான தி.மு.கவை பயங்கரமாக விமர்சித்தவர் சீமான். அதற்காக கைது செய்யப்பட்டார். பிறகு 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார். தற்போது நாம் தமிழர் கட்சி மாநில அளவில் பெரிய கட்சியாக வளர்ந்து விட்டிருக்கிறது.

அரசியல் செயல்பாடுகளில் அதிமுகவை சீமான் பல இடங்களில் விமர்சித்தாலும், திமுக விமர்சிக்கும்போது மட்டும் இவர் திரும்ப திமுகவையே விமர்சிக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.