1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2017 (09:12 IST)

ஆர்.கே. நகர் தொகுதியில் மதுசூதனன்? - ஓ.பி.எஸ் திட்டம் என்ன?

ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.


 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது.  
 
வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் எனவும்,  மார்ச் 27ம் தேதி மனுவை திரும்ப பெறும் நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், ஏற்கனவே கூறியபடி ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என தீபா அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக சார்பில் தினகரன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.  மேலும், ஓ.பி.எஸ் அணி சார்பில் ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த மதுசூதனன் களம் இறக்கப்படுவார் எனத் தெரிகிறது.
 
ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு, மதுசூதனன் மிகவும் பரிச்சியமானவர். எனவே, அவரை நிற்க வைத்து வெற்றி பெற்றுவிட்டல் நாம்தான் உண்மையான அதிமுக என காட்டிவிடலாம் என ஓ.பி.எஸ் அணி கருதுவதாக தெரிகிறது. 
 
அவரை வெற்றி அடைய வைப்பதற்காக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தற்போதே ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறங்கிவிட்டனர். ஆனால், இரட்டை இலைச் சின்னம் தற்போது தினகரன் வசம் இருக்கிறது. எனவே, அவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற குழப்பம் நிலவுகிறது.