திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (13:21 IST)

உள்ளாட்சி தேர்தல் அதிமுக, திமுக அதிரடி வியூகம்: வெல்லப்போவது யார்?

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜொரம் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளாட்சி தேர்தல் பணிகளை இப்பொழுதே ஆரம்பித்துள்ளன.


 
 
மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், பலமான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ள திமுகவுக்கும் இடையே இந்த தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான பணிகளில் கட்சியினரை இரு கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன.
 
அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி முழுக்க முழுக்க மக்கள் நல திட்டங்களையே நம்பியிருக்கிறது. அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் இந்த தேர்தலில் மேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது அதிமுக அரசு.
 
திமுகவும் இந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. மேயரை தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட்டுள்ளதால், மாநகராட்சியிலும் தனி பெரும்பான்மை அளவில் வார்டுகளை வெல்ல ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக இப்போதே வார்டு, கிளை, மண்டல செயலாளர்களை மக்களை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார் அவர்.
 
இரு பெரும் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணியில் தற்போதே இறங்கியுள்ளதால், சட்டசபை தேர்தலை போல் இந்த தேர்தலிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இறுதியில் யார் வெல்லப்போவது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.