கொள்கைப்படை திரட்டி இனப்பகை விரட்டுவோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்
''இளைஞரணியினருக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று நாம் காணும் தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இன்று எப்படி மாறியிருக்கிறது? இங்கு எதுவும் தானாக மாறிவிடவில்லை.
ஓர் இயக்கத்தின், அதன் தலைவர்களின் இடைவிடாத, சோர்வுறாத உழைப்பும் தியாகமும்தான் தேய்ந்து கிடந்த தெற்கை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளப்படுத்தியிருக்கிறது.
இந்த வரலாற்றை இளந்தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் கடமை கழகத்தின் ரத்த நாளங்களான இளைஞரணியினருக்கு உண்டு! கொள்கை வாரிசுகளை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்!
அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து - இளைஞரணியினருக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் உங்கள் பணி!
எண்ணிக்கையில் மட்டும் அல்ல, எண்ணத்திலும் கொள்கையிலும் வலிமையோடு இருந்தால்தான் இந்த இயக்கம் இன்னும் பல நூறாண்டுகள் இன எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்!
கொள்கைப்படை திரட்டி இனப்பகை விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.