ஆன்லைனில் மது கேட்டு வழக்கு – 20,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் மது விநியோகம் செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடுத்தவருக்கு 20000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 42 நாட்களுக்குப் பின்னர் மே 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக வேண்டுமானால் மது விநியோகம் செய்துகொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவரது மனுவில் இணையம் மூலமாக மது விற்பனை செய்ய இணையதளம் மற்றும் செயலி ஆகியவற்றை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தெரிவிக்க அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து மனுதாரருக்கு 20000 ரூபாய் அபராதம் விதித்து அதை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.