பாஜக வரலாறு படைத்திருக்கிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் 2வது முறையாக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்திருக்கிறது என எல்.முருகன் கருத்து.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் இந்த தடவை 4 முனைப்போட்டி ஏற்பட்டு இருந்தது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்னாதளம், நிசாத் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
4 முனைப்போட்டி ஏற்பட்டாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜனதாவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவியது. இதில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று 2 வது முறையாக ஆட்சியை தொடர்கிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் 2வது முறையாக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்திருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது எனவும் எல்.முருகன் கூறியுள்ளார்.