நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கே.எஸ்.அழகிரி ஆவேசம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமைச்சரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை கே.எஸ்.அழகிரி எழுப்பி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை என்றும், அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை என்றும், கே.எஸ்.அழகிரி கூறினார். மேலும் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துசென்ற மறுநாளில் இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும், தேர்தல் நெருங்க நெருங்க இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva