அவசியப்பட்டால் அதிமுகவை தூக்கி விட்டு ஆட்சிக்கு வருவோம்! – கிருஷ்ணசாமி தடாலடி!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுகவை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வருவோம் என கிருஷ்ணசாமி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதிர்காலத்தில் முறைகேடு இல்லாமல் நடக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி ஆட்சியமைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக குறித்த கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.