குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்?: கருணாநிதியின் சூட்சம பேட்டி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் களம் சற்று ஆரோகியமான பாதையில் பயணிப்பது போல் இருந்தது. தமிழக மக்களும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றது, அவரின் வருகைக்கு ஜெயலலிதாவின் நன்றியும், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஜெயலலிதா விளக்கம் அளித்தது, சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது, ஜெயலலிதா திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியது, திமுக உடன் சேர்ந்து தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க இந்த அரசு எதிர்நோக்கி உள்ளது என ஜெயலலிதா கூறியது இவை எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.
இதன் மூலம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறும் என பரவலாக பொதுமக்கள் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்த ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்காது போல் உள்ளது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழத்தில் ஒரு ஆளும் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் திமுகவின் முன் இருக்கும் சவால்கள் என்ன என கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக எந்த சவால்களையும் சந்திக்கும். தற்போது திமுகவை விட அதிமுகவுக்கு தான் சவால்கள் அதிகம். ஒரு எம்.எல்.ஏ மறைந்த பிறகு அதிமுகவின் பலம் தற்போது 130-ஆக உள்ளது. குறைந்த பட்ச பெரும்பான்மையை விட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம்.
இந்த எம்.எல்.ஏ.க்கள் சலனப்படாமல் இருப்பதும், இவர்களைப் பத்திரமாக தங்களிடமே தக்கவைத்துக் கொள்ளுவதும் அதிமுகவின் முன்னுள்ள சவால். இது மெல்லியதோர் கயிற்றின் மீது நடப்பது போன்றது என பதில் அளித்தார் கருணாநிதி.
திமுக தலைவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி திமுக ஆட்சியமைக்க முயற்சிக்கும் என பொருள் கொள்ள வைக்கிறது திமுக தலைவரின் இந்த கருத்து.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சலனப்படாமல் தக்க வைத்திருக்க வேண்டும் என கருணாநிதி கூறியிருப்பது நிச்சயமாக ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். இதற்கு ஜெயலலிதா பதிலடி கொடுக்கும் பட்சத்தில் அது தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது.