செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:39 IST)

வெட்கமான செயலுக்கு குடியரசு என்ற பெயரா? கமல் கேள்வி!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரியில் ஆட்சி கலைப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

 
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 
 
புதுச்சேரியில் இன்னும் தேர்தல் நடைபெற மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் மூன்று மாதங்களுக்கும் குடியரசு தலைவர் ஆட்சியே அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார். 
 
அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.