Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (10:57 IST)
ஆளும் கட்சி நாடக ஆசிரியருக்கு கமல் மறைமுக எச்சரிக்கை
நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் சமீபத்தில் நிலவிய அரசியல் குழப்பம் ஆகியவை குறித்து தனது டுவிட்டரில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆட்சியாளருக்கு எதிராக அவர் பல கருத்துக்களை தெரிவித்ததால் அவர் வன்முறையை தூண்டிவிடுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.,
இந்நிலையில் கமல் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் "இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆளும் கட்சிக்கு மறைமுக எச்சரிக்கை விடும் விதமாக, ' ''சிறையில் சுதாகர் நலமாக உள்ளார் . விடுவிக்கும் முயற்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம். அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம்'' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த டுவீட்டில் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியைத்தான் அவர் நாடக ஆசிரியர் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.