1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 4 நவம்பர் 2017 (15:28 IST)

சோறு வேண்டாம் பழைய மண்வெட்டி போதும்; அதிரடியாக களமிறங்கிய கமல்

நற்பணி இயக்கத்தினர் ஏரி, குளங்களை செப்பனிட விவசாயிகளுக்கு உதவி செய்வார்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
 
இதில் கமல் தனது நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் விவசாயிகளுக்கு ஏரி, குளங்களை செப்பனிட உதவி செய்வார்கள் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மழைக்காலத்தில் பேசிவிட்டோம். அதற்கு பிறகு என்னவாகும் வெயில் காலத்தில் தண்ணீர் இல்லை என கத்துவோம். பிறகு டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்போம். அந்த லாரி போன சாலை பள்ளமாகும். மழை காலத்தில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கும். இது ஒரு சுழற்சியாக மாறிவிட்டது.
 
எனவே எனக்கு தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட உதவி செய்வார்கள். உங்களுக்கு நாங்கள் ஆள் தருகிறோம் என்று சொல்ல முடியாது. ஆனால் அலாரம் போல இருப்போம். 
 
நான் சொல்வதை செய்வதற்கு என்னுடன் 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் குழு, குழுவாக பிரிந்து உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களை வரவேற்று வழிநடத்துங்கள். அவர்களுக்கு நீங்கள் சோறு போட வேண்டாம். பழைய மண்வெட்டி மட்டும் போதும். 
 
நான் சொன்ன கூட்டத்தை திரட்டி ஊக்குவித்து உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்கள் வீடு பிள்ளைகள் அவர்கள். அடுத்த வருடம் குளங்களும், ஏரிகளும் நிரம்பி வழியும். ஆனால் வெளியில் இல்லை.
 
இவ்வாறு மழை நீரை குளங்களிலும், ஏரிகளிலும் சேமித்து வைத்து வெயில் காலத்தில் பயன்படுத்த அதற்கான வேலைகள் செய்ய வேண்டும் என கூறினார்.