செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (09:46 IST)

உயிர்பலி வாங்கும் கல்லட்டி சாலை! மீண்டும் திறப்பு! ஆனால் சில கட்டுப்பாடுகள்?

Kallati Road
ஊட்டியிலிருந்து மசினக்குடி செல்லும் அபாயகரமான கல்லட்டி பாதை மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத்தளமான ஊட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் ஊட்டியை சுற்றியுள்ள பைக்காரா, மசினக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் செல்கின்றனர். அவ்வாறு ஊட்டியிலிருந்து மசினக்குடி செல்ல கூடலூர் பாதை மற்றும் கல்லட்டி பாதை என இரு பாதைகள் உள்ளது. இதில் கல்லட்டி பாதை மிகவும் அபாயமானதாகவும், மர்மமானதாகவும் கருதப்படுகிறது. பல கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த கல்லட்டி பாதையில் கடந்த 7 ஆண்டுகளுக்குள் 20க்கும் மேற்பட்ட மோசமான விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 100க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த கல்லட்டி சாலையில் மர்மமாக நடைபெறும் இந்த விபத்துகளுக்கு பலரும் பல காரணங்களை சொல்கின்றனர். இந்த தொடர் விபத்துகளால் கல்லட்டி சாலை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அப்பகுதிக்கு உணவு பொருட்கள், காய்கறி கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் தவிர சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையே தொடர்ந்து வந்தது.

ஆனால் தற்போது அப்பகுதியில் நடைபெற உள்ள பொக்கபுரம் கோவில் திருவிழாவிற்காக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பேரில் 2 நாட்கள் மட்டும் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் உள்ளூர் வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வெளியூர் வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மட்டும் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K