செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (12:23 IST)

கர்நாடகாவில் காலா ரிலீஸ் ஆகுமா? - குமாரசாமி பதில்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் வருகிற ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஆனால், இப்படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என கன்னட திரையுலகினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
 
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தராததால் ரஜினி கர்நாடகாவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். இதனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ரஜினி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். மேலும், ரஜினி நடித்த காலா படத்தை மாநில நலன் கருதி கர்நாடகாவில் வெளியிட தடை விதித்துள்ளதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
 
அதோடு, காலா படத்தை வெளியிட விருப்பமில்லை என கன்னட திரைப்பட வர்த்தகசபை முதல்வர் குமாரசாமியிடம் மனு அளித்துள்ளனர்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்வர் குமாரசாமி “காலா படத்தை வெளியிட விருப்பமில்லை எனவும், இப்படம் கர்நாடகாவில் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை எனவும் மனு அளித்துள்ளனர். அதுபற்றி பரிசீலித்து வருகிறேன்” என பதிலளித்துள்ளார்.
 
எனவே, கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் இப்படம் அங்கு வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.