1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (12:06 IST)

அணிகள் இணைப்பிற்கு நான் முட்டுக்கட்டையா? - கே.பி.முனுசாமி விளக்கம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பிற்கு நான் தடையாக இருக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 


 

 
சில நாட்களுக்கு முன்பு அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சசிகலா நியமித்தது சட்ட விரோதம் என எடப்பாடி அணி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார்.  
 
எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறையை எடப்பாடி அணி நிறைவேற்றிவிட்டதால், எந்த நேரமும் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றால் போல், இதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினார். ஆனால், இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. முக்கியமாக, ஓ.பி.எஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமி, மதுசூதனன் உள்ளிட்ட சிலர், எடப்பாடி அணியுடன் தற்போது இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. எனவே, இரு அணிகளும்  இணைவதில் இழுபறி நீடிக்கிறது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி “ எங்கள் தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேறும் வரை இரு அணிகளின் இணைப்பு என்பது சாத்தியமில்லை. முக்கியமாக,  அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்படும் வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. உண்மை தொண்டர்களின் கருத்தை சில கருத்துகளை நான் தெரிவித்தேன். அதேசமயம், ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.