1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (16:55 IST)

ஓபிஎஸ் கோரிக்கைக்கு பணிந்தது பழனிச்சாமி அரசு: போயஸ் கார்டன் வீடு ஜெ. நினைவிடமாகிறது!

ஓபிஎஸ் கோரிக்கைக்கு பணிந்தது பழனிச்சாமி அரசு: போயஸ் கார்டன் வீடு ஜெ. நினைவிடமாகிறது!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


 
 
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் வைத்தனர்.
 
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் அதிமுக அணிகள் இணையும் என ஓபிஎஸ் அணியினர் நீண்ட நாட்களாக கூறிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தினகரன், சசிகலா குடும்பத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தையில் அடுத்தக்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை இன்று அமைச்சர்களுடன் சந்தித்தார். டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணி செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றார்.
 
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலைய இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் ஓபிஎஸ் அணியின் அனைத்து கோரிக்கைகளையும் எடப்பாடி அணி நிறைவேற்றி விட்டது.