ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2016 (03:16 IST)

ஜெயலலிதாவின் உருவப்படம் எரிப்பு - கன்னட அமைப்பினர் போராட்டம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முடிவெடுத்ததை அடுத்து அங்குள்ள கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
 

 
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், இடைக்கால உத்தரவாக, அடுத்த 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால், போதிய தண்ணீர் இல்லாத்தால், உச்சநீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார்.
 
கர்நாடகத்தின் நிலை குறித்து, உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம். இதுதவிர, காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகி கர்நாடகத்தின் நிலையை விளக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே, கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்தும், முதல்வர் சித்தராமய்யா ராஜிநாமா கோரியும், புதன்கிழமை முதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து செவ்வாய்க்கிழமையன்று, மைசூர், மாண்டியா, பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கூறி பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
சாலையில் மத்தியில் டயர் உள்ளிட்ட பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்பினர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில், இதனை கண்டித்து கன்னட அமைப்பினர் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
போராட்டத்தின்போது ஜெயலலிதா உருவப்படத்தை எரித்தும், கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா மற்றும் மத்திய அரசுக்கும் எதிராக  கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.