செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:20 IST)

கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் மிஸ்ஸிங் (வீடியோ)

முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.


 

 
இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவருடைய சார்பில் அனைத்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
 
ஏற்கனவே, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனின் படங்கள் மற்றும் பெயர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும், கோவை ரோட்டில் செண்டர் மீடியட்டரில் ஒளிரும் பிளக்ஸ்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படமும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விளம்பரமாகவும், மேலும் ஒரு விளம்பரத்தில் துணை முதல்வர் ஒ.பி.எஸ் படமும், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ள விளம்பரம் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில் ஒன்றுபட்ட இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணியினரிடையே, மீண்டும் பிரிவினை ஏற்படும் வகையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோரது பெயர்களை விட்டு விட்டு பிளக்ஸ்களை வைத்துள்ளதற்கு அ.தி.மு.க வினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், இ.பி.எஸ் பிளக்ஸ் பிரமாண்ட பேனரில், எம்.ஜி.ஆர் புகைப்படமும் இல்லை, ஜெயலலிதா புகைப்படமும் இல்லை, கரூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வானுயர பிளக்ஸ்களும், துணை முதல்வர் ஒ.பி.எஸ் வானுயர பிளக்ஸ்கள் பழைய பேருந்து நிலையம் அருகேயும் வைக்கப்பட்டுள்ளன. 
 
அதே போல், மக்கள் கூடாத இடத்தில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிளக்ஸ் வானுயர அளவில் வைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் பிளக்ஸ் மிஸ்ஸிங் ஆகியுள்ளதற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் கரூர் வருவதையொட்டி ஒரு சில ரோடுகள் பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு, ரெடிமேட் ரோடுகள் போடப்பட்டுள்ளன. அதுதவிர முக்கிய வீதிகளில் உள்ள மரணக்குழிகளை இதுவரை யாரும் கண்டு கொள்ள வில்லை.
 
நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் விளம்பரத்தின் மோகத்தினால் கரூரில் பரபரப்பும், கோஷ்டி பூசலும் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த விளம்பரத்தினால் போக்குவரத்து வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், ஆங்காங்கே வழி தெரியாமல், சிக்னல் தெரியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகின்றது.

சி. ஆனந்த்குமார் - கரூர் செய்தியாளர்