1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (17:17 IST)

முதலமைச்சரும் நவீன மேலாண்மை உத்திகளும்

சட்டமன்றத் தேர்தல் தந்த வெற்றி, புதியத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு  விழா என வழக்கமான உற்சாகத்துடனே வலம் வருகின்றார் முதலமைச்சர். தங்கத் தாரகை, புரட்சித் தலைவி என்று அதிமுக தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் முதலமைச்சரின் சில பரிணாமங்கள்  நவீன மேலாண்மை உத்திகளை ஞாபகப்படுத்துகின்றன. .அவற்றில் ஐந்து மேலாண்மை உத்திகள் இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைக்குத் தேவைப்படுகின்றது.


 

 
Single and Centralized Management
 
கட்சியையும், ஆட்சியையும் மிகச் சரியாக ஆளுமை செய்பவர் செல்வி.ஜெயலலிதா. கட்சித் தொடங்கி ஆட்சி வரை அனைத்தும் அம்மா மயம். ஒரு நிறுவனத்தை ஆள்பவர்களின் தலைமைப்  பண்பு  எல்லா மட்டத்திலும் எல்லாத் துறைகளிலும் வெளிப்படும் போது அந்த நிறுவனம் மேலும் சிறப்புப் பெறுகிறது. உதாரணமாக, ஓர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், டிசைன், உற்பத்தி, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட், தரக் கட்டுப்பாடு, சேல்ஸ், மார்க்கெட்டிங்,  ஆராய்ச்சி என பல துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் போது தான் அந்த நிறுவனம் அவர் மாயம் ஆகிறது. அது போல அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் (தொண்டர்கள் முதல் மூத்த அமைச்சர்கள் வரை) ஜெயலலிதாவின் ஆளுமை வெளிப்படுவதால் அனைத்தும் அம்மா மயம் ஆகி விட்டது. அம்மாவே அதிமுக, அதிமுகவே அம்மா என்பது ஊர் அறிந்த ரகசியம்.
 
High Risk More Profit
 
முதல்வரின் சிறப்பு அம்சம் அவரது துணிச்சலான முடிவுகள். அவருடைய அரசியல் எதிரிகளே அவரிடம் பிடித்ததாகச்  சொன்ன விஷயம் அவரது அசாத்திய துணிச்சல். இந்த அசாத்திய துணிச்சல் அவரிடம் வெளிப்படும் போதெல்லாம் அவர் மேலும் ஒளிர்ந்திருக்கிறார். உலகின் எந்த ஓர் ஆட்சியாளரும் செய்யத் துணியாத ஏன் நினைத்து கூட பார்க்காத ஓர் செயலை தனது ஒரு கையெழுத்தின் மூலம் செயல்படுத்தினார். அது 2003 ஆம் ஆண்டின் மாஸ் டெர்மினேஷன். அதை உச்ச நீதி மன்றம் வரை கொண்டு சென்று உறுதிப் படுத்திக்கொண்டார். சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது, காவேரி நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது, மத்திய அரசின் அனுமதி கோராமல் தன்னிச்சையாக ராஜீவ் கொலையாளிகள் விடுதலை அறிவிப்பு என பல உதாரணங்கள் சொல்லலாம்.
 
Long Term goals
 
திரைப்பட நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கிய முதலமைச்சர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், எம்.எல்.ஏ, எம்.பி ,சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் என பல பரிணாமங்களில் ஜொலித்தவர். தோல்விகளே கண்டிராதவர் அல்ல முதலமைச்சர். அந்த தோல்விகளை எல்லாம் தனது தொலைநோக்குடன் கூடிய விசாலமான பார்வைகளால் பந்தாடியவர். தன்னை ஓர் வட்டத்துத்துக்குள் எப்பொழுதும் அவர் வைத்து கொண்டது கிடையாது. அவருடைய பார்வை எப்பொழுது எல்லாம் விசாலம் ஆகிறதோ, அப்போது எல்லாம் அவர் புதிய பதவிகளைப் பெற்றிருக்கிறார். ஓர் நிறுவன செயல் அதிகாரியின் புதிய பார்வை, புதிய சிந்தனைகள் .புதிய முயற்சிகள், அந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது.
 
Smart Work
 
இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடின உழைப்பாளிகள் தேவை இல்லை. அவர்களின் தேவை எல்லாம்  ஸ்மார்ட் ஒர்க்கர்ஸ் தான். இது முதமைச்சரிடம் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டது. பாரத பிரதமர் மோடியின் அப்போதைய அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோரின் டிஜிட்டல் பிரச்சார உத்திகளை தனது இரு வார்த்தையால் (மோடியா ? லேடியா ?) பூஜ்ஜியம் ஆக்கினார். சட்ட நுணுக்கங்களை மிகச் சிறப்பாக அறிந்திருந்தும், நிராகரிக்கப்படும் என்று தெரிந்தே 2001ஆம் சட்டப் பேரவைத் தேர்தலின் போது நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிராகரிக்கப்பட்டவுடன் அதை மக்கள் மன்றத்தில் பேசினார். வெற்றிக்கு அடி கோலினார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தி மு க - தே மு தி க கூட்டணி உருவக்காதவாறு  மிகக் கவனத்துடன், சிறப்பாக செயல்பட்டு அனைவரும் எதிர் பார்த்ததைப் போல வெற்றியும்  கண்டார்.  
 
Take/Eliminate Nuisance Factors
 
ஒரு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒரு திட்டத்தை செயல் வடிவத்திலிருந்து செயலாக்கத்திற்கு (Design to Product) எடுத்துச் செல்லும் வரை பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. கேள்விகளே இல்லாமல் ஒரு திட்டத்தை நீங்கள் எடுத்து செல்வீர்களே ஆனால் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது உங்களை சுற்றி இருப்பவர்கள் ரோபோவாக இருக்க வேண்டும். முதலமைச்சர் சர்வாதிகாரியும் அல்ல, நாம் ரோபோவும் அல்ல. கேள்விகளைக் கேட்கும் அதிகார மையங்கள் அரசியல் களத்தில் உள்ளன. கேள்விகளால் வேள்விகள் செய்தவர் முதலமைச்சர். .பல கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டும், சில கேள்விகளை அலட்சியம் செய்தும், தன்னைத் தானே நிரூபித்து கொண்டவர் முதலமைச்சர்.









இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை