எப்போது பாராட்டு விழா வைக்கிறார் ஸ்டாலின் ? –ஜெயக்குமார் கேள்வி !
வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது பாராட்டு விழா வைக்கப்போகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு முதலீடுகளைக் கவர்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்களும் சென்றனர். இந்த சுற்றுப்பயணத்துக்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனமும் வைத்தன.
இந்நிலையில் சுற்றுப்பயணத்தை விமர்சித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ‘ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது, அதன் மூலம் எங்கெங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இப்போது கொண்டு வரும் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அப்படி வெளியிட்டால் முதல்வருக்கு நானே பாராட்டு விழா நடத்துவேன்’ எனக் கூறினார்.
இதையடுத்து வெளிநாடுகளில் சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய முதல்வர் ‘‘8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை, 41 நிறுவனங்களில் இருந்து பெற்றுள்ளோம்’ எனக் கூறினார். அதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘ ஸ்டாலின் சொன்னபடி எப்போது முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்த போகிறார். அவர் சொன்னதை செய்வார் என்று நம்புகிறேன். சீக்கிரம் நடத்தினால் திமுக, திமுக என இரண்டு கட்சிகளின் இமேஜும் உயரும். தமிழகத்தின் அரசியல் மாண்பை உலகமே வியந்து பாராட்டும்’ எனக் கூறியுள்ளார்.