தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணனை கண்டித்த ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை நடத்த லஞ்சம் வாங்கியதாக ஆதாரம் இல்லாமல் பொன்.ராதாகிருஷ்ணன் பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டியளித்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்த போதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை எதிர்த்து நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். ஆனால், மக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இப்போது அதற்கு எதிராக போராடுகிறார்கள். அந்த ஆலை தரப்பில் என்னிடமே டீல் பேசினர். எனக்கு பணம் அளிக்க முன் வந்தனர். ஆனால், அதை மறுத்தேன். ஆனால், நான் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். உண்மையிலேயே அங்கு என்ன பிரச்சனை என்பதை மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக, எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும். தெருவில் செல்பவன் போல் அவர் பேசக்கூடாது. யார் லஞ்சம் கொடுத்தார்? யார் வாங்கினார்? என்ற தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டும்” என பேட்டியளித்தார்.
அதேபோல், ராமமோகனராவ் அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் செயல்பட்டார். ஜெ. மரணம் தொடர்பான விசாரணையில், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.