திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (15:55 IST)

மெர்சல் எதிரொலி - விஜயை குறி வைக்கும் வருமான வரித்துறை?

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகள் கொண்ட வசனம் இடம் பெறுவதாக தமிழிசை சவுந்தராஜான் போர்க்கொடி தூக்கினார். 


 

 
அவரைத் தொடர்ந்து ஹெச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  ஒருபுறம் நடிகர் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மெர்சல் படத்திற்கும், விஜய்க்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த ‘புலி’ படம் வெளியானது போது, வருமான வரித்துறை விஜயின் வீடு, அலுவலகம், படத் தயாரிப்பாளர் வீடு என சில இடங்களில் வருமான வரி சோதனை நடத்தியது. அதில், விஜய் தரப்பில் கணக்கில்  காட்டப்படாத ரூ.3 கோடி கைப்பற்றப்பட்டது. ஆனால், விஜய் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை.
 
மேலும், தன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கான வரியை செலுத்தி விடுகிறேன் எனக்கூறியதோடு, அதற்கான விண்ணப்பத்தையும் வருமான வரித்துறையினரிடம் விஜய் கொடுத்தார். ஆனால், அவரின் விண்ணப்பத்தை ஏற்கலாமா அல்லது அவர் மீது வழக்கு தொடரலாமா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த முடிவை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.
 
ஒன்று அபாரதத்துடன் வரியை செலுத்த வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும். இதில் எதை விஜய் செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை.
 
இந்நிலையில், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து மத்திய அரசிற்கு எதிரான சில கருத்துகளை விஜய் பேசியுள்ளார். இது பாஜவினரை கோபப்படுத்தியுள்ளது. எனவே, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப டெல்லி உத்தரவு கிடைத்த பின்பு வருமான வரித்துறையினர் முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.
 
மெர்சல் பட பிரச்சனை தணிந்த பின், சட்டரீதியான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.