பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு கிடைக்காமல் போனதே திமுகவால்தான்! – பாஜக அண்ணாமலை!
பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் பிரதமர் திட்டத்தில் வீடு கிடைக்காமல் போனதற்கு திமுகவே காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சிறந்த சமூக சேவைக்காக முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கரங்களால் விருது பெற்றவர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை. பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு தருவதாக சொன்னதாகவும், ஆனால் தரப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை சின்னப்பிள்ளைக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டித்தருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான ஆவணங்கள் மதுரை சின்னப்பிள்ளையிடம் நேரில் அளிக்கப்பட்டன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு கிடைக்காமல் போனது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அதற்கு விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருப்பது வேதனைக்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அம்மா அவர்களுக்கு, வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்யப் கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்.
அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா அவர்கள். இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K