1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (08:22 IST)

தமிழகத்தில் மசூதிகளை திறக்கவேண்டும் – முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள்!

தமிழகத்தில் ஊரடங்குக் காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரமலான் மாதத்தைக் கணக்கில் கொண்டு அவற்றைத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் வைத்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களைக் கடக்க போகிறது. இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ரமலான் மாதத்தின் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மசூதிகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது சம்மந்தமான அறிக்கையில் ‘கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்த நேரத்திலிருந்து தங்களது அரசு வெளியிடும் அனைத்து உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் தமிழக முஸ்லிம்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு கடைபிடித்தனர். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில், பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகையை நிறுத்தியதோடு அனைத்து பள்ளிவாசல்களையும் மூடி வைத்தனர்.
முஸ்லிம்களுக்கு புனித ரமலான் மாதம் எவ்வளவு முக்கியமானது என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு மாதம் முழுதும் பகல் காலங்களில் உண்ணாநோன்பு இருக்கும் முஸ்லிம்கள் மாலை நேரத்தில் நோன்பு திறப்பிலும் (இப்தார்) இரவு நேரத்தில் விசேஷ தொழுகைகளிலும் மிகுந்த பக்தியுணர்வோடு ஈடுபடுவார்கள். கொரோனா பரவலினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தங்களது புனித மாதத்தை மகிழ்ச்சியாகவும் முழு பக்தியுடனும் கடைபிடிக்க முடியவில்லையே என்கிற கவலை தமிழகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

னவே புனித ரமலான் மாதம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிற நிலையில் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் வரும் மே 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்நாட்கள் முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானவை என்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக பள்ளிவாசல்களைத் திறக்கவும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து வழிபாடுகளை நிறைவேற்றவும் அனுமதி வழங்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தங்களுடன் நேரடியாகப் பேச விரும்புகிறோம். ஆதலால் தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.