பழமை வாய்ந்த கோவில்களை எல்லாம் இடித்திருக்கிறேன்! – ஏன் அப்படி சொன்னார் டி.ஆர்.பாலு?
திமுக நிகழ்வு ஒன்றில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு சாலை அமைக்க பல கோவில்களை இடித்ததாக பேசியதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து சமீபத்தில் மதுரையில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை தான் இடித்ததாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் டி.ஆர்.பாலு இந்து சமூக விரோதி என்றும், இதற்காகதான் அறநிலையத்துறையை அகற்ற வேண்டும் எனவும் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளனர்.
ஆனால் அவர்கள் டி.ஆர்.பாலு பேசியதை முழுமையாக பகிராமல் கத்தரித்து வெளியிட்டுள்ளதாக திமுகவினர் கூறியுள்ளனர். டி.ஆர்.பாலு பேசிய வீடியோவில் “நான்கு வழி சாலை, ஜிஎஸ்டி சாலை அமைக்கும் பணிகளின்போது 100 வருட கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளையெல்லாம் இடித்திருக்கிறேன். இதனால் எனக்கு வாக்கு வராது என்றும், என்னுடைய கட்சியினர் வலியுறுத்தியும் நான் அதை கேட்கவில்லை. ஆனால் அதற்கு ஈடாக பிரம்மாண்டமான நூற்றுக்கணக்கான மக்கள் அமர்ந்து உண்ணும் அளவிற்கான பெரிய கோவிலை கட்டிக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதைதான் பாதியை மட்டும் கத்தரித்து சிலர் பரப்பி வருவதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K