டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுகிறதா? அமைச்சர் தங்கமணி விளக்கம் !
தமிழகத்தில் நாளை முதல் நேரக்கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதிலலளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாமல் கடைகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்களும் நடந்துள்ளன.
அதுமட்டுமில்லாமல் தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை மது கிடைக்காத மன உளைச்சலில் 10 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தினமும் இரண்டு மணிநேரம் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில் அதுகுறித்து மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேள்வி எழுப்பியபோது ‘சமூகவலைதளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை. அதுபோல வதந்திகளைப் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.