நேரில் ஆஜராக முடியாது; கேள்வியை அனுப்பி விடுங்கள்! – ரஜினியின் கோரிக்கை ஏற்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ரஜினி விலக்கு கேட்டு மனு அளித்த நிலையில் அவரது கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் மூலமாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகள் முதலிய பலரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிசூடு சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் தீய சக்திகள் ஊடுறுவியதாக கூறியிருந்தார்.
அதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தான் நேரில் ஆஜராக இயலாது என்றும் விசாரணை கேள்விகளை அனுப்பி வைத்தால் எழுத்து மூலமாக பதில் சொல்வதாகவும் அனுமதி வேண்டி ரஜினிகாந்த் மனு அளித்திருந்தார். ரஜினியின் மனு மீதான விசாரணையில் அவர் நேரில் ஆஜராக தேவையில்லை என விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சீல் இடப்பட்ட உறையில் வைத்து அளிக்கப்பட்டிருப்பதாக ரஜினியின் வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.