பெண்ணின் திருமண வயது அதிகரிப்பு..! இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்..!!
ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய சராசரி திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை, இமாச்சலப் பிரதேச அரசு நிறைவேற்றியுள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2023 டிசம்பரில், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிப்பு குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இந்நிலையில் இமாச்சல் மாநில சட்டசபையில் பெண்களின் திருமண வயதை 18 என்பதில் இருந்து 21 ஆக உயர்த்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானி ராம் ஷண்டில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டசபையில் விவாதம் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவின் மூலம் ஆண்களின் திருமண வயது 21 என்று இருப்பது போன்று, பெண்களின் திருமண வயது 21 ஆக இருக்கும்.
பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி , தொழில் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, திருமண வயதை உயர்த்தி உள்ளதாக இமாச்சல் அரசு தெரிவித்துள்ளது.