1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (14:53 IST)

நடக்குமா வேலூர் தேர்தல் ? – பதில் சொல்கிறார் தமிழக தேர்தல் அதிகாரி !

வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பதிலளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்தார்.

அதையடுத்து ஒருநாள் இடைவெளியில் இன்று மீண்டும் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் கொடவுனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக அனுப்பவேண்டிய விவரங்களும் அதன் கவர்களில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது சம்மந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் வாக்குகளுக்குப் பணம் கொடுத்ததாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்படுவாரா அல்லது வேலூர் தொகுதிக்கே தேர்தல் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

இதுகுறித்து செய்தியாளர்கள் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கேள்வி எழுப்பியபோது ‘இது தொடர்பாக வருமான வரித்துறை அளித்ததும் அதன் பின்னர்தான் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள் ஆய்வு அடிப்படையிl வருமான வரித்துறை விரைவில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அறிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தேர்தல் தள்ளிப்போவது குறித்த சந்தேகம் அதிகமாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து  அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில் நடக்க இருந்த இடைத்தேர்தலும் இவ்வாறே ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.