வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:24 IST)

சிறை நிர்வாகத்தால் நடத்தப்படும் ஃப்ரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தனர்!

தமிழ்நாடு சிறை துறை சார்பில் சிறைவாசிகள் நலனுக்காக  பெட்ரோல் பங்குகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்கெட் அருகே உள்ள மகளிர் தனி சிறை வளாகத்தில் ஃபிரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
 
அதற்காக ரூ.19.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் ஃபிரீடம் பெட்ரோல்  விற்பனை நிலையம் இன்று திறக்கப்பட்டது. சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர். 
 
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வர் தயாள், மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி, திருச்சி மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் 24 மணி நேரமும் செயல்படும். திருச்சி மத்திய சிறையில் உள்ள நீண்ட நாள் சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றுவார்கள். மூன்று ஷிப்டுகளாக அவர்கள் பணியில் இருப்பார்கள். இதிலிருந்து கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். 
 
இதன் மூலம் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக இது பயனுள்ள வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.