1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (04:21 IST)

’அதிமுக விரைவில் உடையும்’ - திருவாய் மலர்ந்த மத்திய அமைச்சர்

அதிமுகவில் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கட்சி உடையும். இந்த ஊழல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என குற்றம் சாட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியாக வரவேற்கத்தக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. கவர்னர் யோசிக்காமல் அன்றே முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? 3 நாட்களுக்கு ஒரு முதலமைச்சர் அதற்கு பிறகு ஒரு முதலமைச்சர் என்ற நிலை வந்திருக்கும்.

அதிமுகவில் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கட்சி உடையும். இந்த ஊழல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என குற்றம் சாட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கை தொடர்ந்தது தி.மு.க., வழக்கை மேல் முறையீடு செய்தது கர்நாடக காங்கிரஸ் அரசு. பிறகு எப்படி மத்திய அரசுக்கு தொடர்பு இருக்கும்.

மத்திய அரசு ஒரு போதும் கோர்ட்டு விவகாரங்களில் தலையிடாது. வழக்கை நன்கு விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு நியாயமான, இறுதியான நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.