வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (11:00 IST)

திருமங்கலம் விஜயராஜ் கேப்டன் விஜயகாந்த் ஆனது எப்படி? – விஜயகாந்த் வரலாறு!

Vijayakanth
தமிழ் சினிமாவிலும், தமிழ்நாடு அரசியலிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் விஜயகாந்த். இன்று அவர் மறைந்த நிலையில் அவரது திரைத்துறை வருகை மற்றும் வாழ்க்கை வரலாற்று சுருக்கம் உங்களுக்காக..



மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் உண்மையான பெயர் விஜயராஜ். சிறுவயது முதலே விஜயராஜுக்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். எம்ஜிஆர் படங்களை விரும்பி பார்ப்பார்.

பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயராஜ் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு தனது இளவட்டங்களுடன் சினிமா பார்ப்பதை வேலையாகக் கொண்டிருந்தார். அதனால் அவரது அப்பா அழகர்சாமி கீரைத்துரையில் உள்ள அரிசி ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை விஜயராஜிடம் அளித்தார். அங்கு விஜயராஜ் மற்றும் நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்தின் மேல் பகுதியில் சினிமா விநியோகஸ்தர் முகமது மர்சுக் அலுவலகமும் இருந்தது. அவரது சேனாஸ் பிலிம்ஸ் பல தமிழ் படங்களை வாங்கி வெளியிட்டு வந்தது.

Vijayakanth


விஜயராஜுடன் பழக்கமான முகமது மர்சுக் அவரது சினிமா நடிப்பு ஆசையை கண்டு கொண்டார். விஜயராஜும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்க சென்னையில் உள்ள இயக்குனர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது ரஜினிகாந்தை வைத்து ’என் கேள்வுக்கு என்ன பதில்’ என்ற படத்தை இயக்கி வந்தார் பி.மாதவன்,. அதில் ரஜினியின் தம்பியாக விஜயராஜை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டார். ஆனால் அது நடக்காமல் போனது.

பின்னர் தொடர்ந்து சினிமாவில் பல முயற்சிகளை செய்து வந்த விஜயராஜுக்கு 1979ம் ஆண்டில் எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளியான ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அகல்விளக்கு என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். ஆனாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படமாக அமைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவர் நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம்தான். அங்கிருந்து திருமங்கலம் விஜயராஜாக இருந்தவர் விஜயகாந்தாக மாறினார்.

Vijayakanth


அதற்கு பின் தொட்டதெல்லாம் துலங்கும் நடிப்பு விஜயகாந்துடையது. தொடர்ந்து மல்லி, நெஞ்சிலே துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, பட்டணத்து ராஜாக்கள், நீதியின் மறுபக்கம், சாட்சி என பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் விஜயகாந்த். அவ்வாறாக தொடர்ந்து நடித்து வந்த விஜயகாந்துக்கு 100வது படமாக அமைந்தது ‘கேப்டன்’ பிரபாகரன். பெரும்பாலான பெரிய நடிகர்களுக்கு 100வது படம் வெற்றி படமாக அமையாது. ஆனால் விஜயகாந்துக்கோ கேப்டன் பிரபாகரன் அதிரடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.

Captain Prabhakaran


அந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்தை மக்கள் செல்லமாக கேப்டன் விஜயகாந்த் என அழைக்கத் தொடங்கினார்கள். இப்படியாக திரைத்துறையில் ஒரு ஆளுமையாக உயர்ந்த விஜயகாந்த் மொத்தமாக 153க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த் எந்த அளவு புகழ்பெற்றவர் என்றால் 1984ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து வரலாற்று சாதனையை படைத்தவர். இதுவரை வேறு எந்த நடிகரும் ஒரு ஆண்டில் இத்தனை படங்களில் நடித்ததில்லை. இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது திரைக்காவியங்கள் மூலம் என்றென்றும் நம்மோடு வாழ்வார்.

Edit by Prasanth.K