பொன்பரப்பி தாக்குதல் சம்பவம் – சீரமைப்புப் பணிகள் தொடக்கம் !
தேர்தல் நாளன்று பொன்பரப்பியில் நடந்த தாக்குதலில் சேதமடைந்த தலித் மக்களின் வீடுகளை சீரமைக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தல் நாளன்று பானை சின்னத்தில் வாக்களிப்பது தொடர்பாக அங்குள்ள இரு பிரிவு மக்களுக்கு இடையே பிரச்சனை எழுந்தது. பிரச்சனை பெரிதாக அங்குள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தாக்குதலில் காயம்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தை அடுத்து சேதமடைந்த வீடுகளை கணக்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு, வருவாய் ஆய்வாளர் கஸ்தூரி, விஏஓ இளையராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வீடுகள் 48 எனக் கணக்கிட்டுள்ளனர். இதையடுத்து இப்போது சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சேதமடைந்த வீடுகளில் உள்ள ஓடுகளை மாற்றுதல், உடைந்த ஜன்னல் கதவுகளை மாற்றுதல் ஆகியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சில நாட்களில் நடந்து முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்பரப்பியில் இப்போது அமைதியான சூழல் நிலவி வருவதாகவும் இருப்பினும் பாதுகாப்பிற்காக போலிஸார்களை ஈடுபடுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.