ரஜினி, தனுஷிடமும் கைவரிசை காட்டிய ஈஸ்வரி? – போலீஸ் தீவிர விசாரணை!
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீட்டிலும் திருடியிருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலேயே வசித்து வருகிறார். கடந்த மாதம் 9ம் தேதி தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க, வைர நகைகள் திருட்டுப் போனது குறித்து ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ரஜினி வீட்டு வேலைக்காரப் பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் 100 பவுனுக்கு மேல் தங்க நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் சிக்கியுள்ளன. மேலும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் சொகுசு வீடு ஒன்றும் வாங்கியுள்ளார் ஈஸ்வரி.
இவற்றை ஈஸ்வரியிடமிருந்து பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தவெளியை சேர்ந்த ஈஸ்வரி கடந்த 2006 முதலாக ரஜினி வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். மெல்ல அங்கிருந்தவர்களோடு நெருங்கி பழகிய ஈஸ்வரி ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் லாக்கர் சாவி இருக்கும் இடம் தெரியும் அளவிற்கு அந்த வீட்டிற்குள் அவருக்கு சுதந்திரம் இருந்துள்ளது.
அதை பயன்படுத்தி இந்த திருட்டை அவர் செய்துள்ளார். ஐஸ்வர்யா 60 பவுன் நகைகளை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் ஈஸ்வரியிடம் அதற்கு அதிகமான நகைகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈஸ்வரி நடிகர் ரஜினி, தனுஷ் போன்றவர்களிடம் இருந்தும் திருடினாரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K