தியேட்டர்களில் அதிக கட்டணம்; தமிழக அரசுக்கு எதிரான வழக்கு : பரபரப்பு தீர்ப்பு
தமிழகத்தில் உள்ள சினிமா திரையரங்குகள், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில், படம் பார்க்க வருபவர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த இந்த சென்னை உயர்நீதிமன்றம், நிர்ணயிக்கப்படதை விட அதிக கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வெளியானது.
இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடம் பெரும் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரின் புகாருக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘அதிக கட்டணம் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் தியேட்டர்கள் நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் செய்த இலவச தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தியேட்டர்களாக திடீரென சென்று சோதனை நடத்த அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் படி சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.