லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த நாகராஜன் என்பவர் இல்லத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோர் இணைந்து கேரளா, மகாராஷ்டிராவில் லாட்டரி விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து மார்ட்டின் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் எந்தவித முறைகேடும் நடந்ததாக இல்லை என்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கை முடித்து வைத்திருப்பது தவறானது என்று வாதிட்ட நிலையில், மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Edited by Siva