இந்த 4 விதிகளை மீறினால் டிரைவிங் லைசென்ஸ் நிரந்தர ரத்து: தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் பெருகி வரும் வாகன விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவதே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதால் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் ஒன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதோடு உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கான ஒருசில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் சோதனை ஆய்வின்போது அசல் உரிமத்தைக் காண்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் சிறைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர்களின் உரிமங்களை தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்ய இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.