கனமழை எதிரொலி - தமிழகத்தில் 5 பேர் பலி
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை ஆகிய 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே, 8 மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாளைக்கு கனமழை அல்லது அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழையில் பல இடங்களில் இடி மின்னல் ஏற்பட்டது. இதில், சென்னை அனகாபுதூரை சேர்ந்த லோகேஷ்(19), கிஷோர்(17) ஆகியோர் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், நாகை மாவட்டம் சீர்காழியில் பெருமங்களம் எனும் இடத்தில் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ராமச்சந்திரன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
மேலும், ஆரணியை அடுத்து உள்ள லாடப்பாடியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நித்யா(14) மற்றும் கடலூர் மாவட்டம் பில்லாலித்தொட்டியில் வீட்டு சுவர் இடிந்து லதா ஆகியோர் உயிரிழந்தனர்.