1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:19 IST)

ஜீவா சுரங்கபாதையில் தேங்கிய மழைநீர் - வியாசர்பாடியில் மக்கள் அவதி

சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கபாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 
முக்கியமாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் நேற்று முழுவதும் பெய்த மழை காரணமாக வியாசர்பாடி பகுதியில் உள்ள ஜீவா சுரங்கபாதையில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அதனால், இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அதில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நடந்து செல்பவர்கள் மட்டும் பக்கவாட்டில் உள்ள நடைபாதை வழியாக சென்றனர்.
 
மேலும், இன்று காலை 7 மணியளவில், அந்த சுரங்கப்பாதை வழியாக சென்ற ஒரு மாநகர  பேருந்து மழைநீரில் சிக்கிக் கொண்டது. அதன்பின் ஒருவழியாக அந்த பேருந்து மீட்கப்பட்டது. அதன் பின் அந்த சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.