வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (07:31 IST)

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதை அடுத்து, தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று, டிசம்பர் 15ஆம் தேதி, புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராமநாதபுரம் உள்பட தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று நிலவிய நிலையில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வாக உருமாற வாய்ப்புள்ளது. இது வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், டிசம்பர் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva