திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (09:14 IST)

மாணவர்கள் கையில் கயிறுகள் கட்டக்கூடாது – பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக ஹெச் ராஜா !

பள்ளி மாணவர்கள் கையில் சாதிய அடையாளத்தைக் காட்டும் வண்ணம் கயிறுகளைக் கட்டக்கூடாது எனும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கு ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கைகளில் வித விதமான வண்னங்களில் கயிறுகள் கட்டி வருவதாகவும், இதில் சிலர் தங்கள் ஜாதியைக் குறிக்கும் வண்ணங்களில் கயிறுகள் கட்டி வருவதாகவும் அதனால் மாணவர்களுக்குள் ஜாதிய மோதல்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘பள்ளிகளில் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிவருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்தப் பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும்கூட ஊக்குவிப்பதாகத் தெரியவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளைத் தூண்டுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் , பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ’பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகளைக் கட்டக் கூடாது. நெற்றியில் திலகமிடக் கூடாது எனப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தனிநபர் உரிமைக்கும், இந்து மத உணர்வுக்கும் எதிரானது. நெற்றியில் திலகமிடுவதும் கையில் கயிறு கட்டுவதும் இந்துக்களின் பழக்க வழக்கம். இதில் சாதி எங்கிருந்து வந்தது” எனக் கூறியுள்ளார்.

இதனால் சுற்றறிக்கையை திரும்ப பெறவேண்டும் இல்லையென்றால் மாணவர்களுக்குக் கயிறு கட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.