1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:10 IST)

பொங்கல் அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ இல்ல! – ஆளுனர் எடுத்த வன்ம முடிவு?

Governor RN Ravi
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுனருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுனரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரை இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஆளும் திமுக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நேற்று நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையில் சில வார்த்தைகளை பேசாமல் விட்டதும், அதை தொடர்ந்து முதல்வர் ஆளுனருக்கு எதிராக தீர்மான நிறைவேற்றியதால் ஆளுனர் வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆளுனருக்கு எதிராகவும், ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும் என இருபுறமும் பலர் வாக்குவாதங்களை தொடுத்து வருகின்றனர். தற்போது ஆளுனர் பொங்கலை முன்னிட்டு ஆளுனர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அழைப்பிதழை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ்நாடு அரசின் சின்னம் மற்றும் பெயர் இடம்பெறாமல், இந்திய அரசின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு பெயர் இடம்பெற்றிருந்துள்ளது.

Su Vengadesan


ஆளுனரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.

இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலரும் ஆளுனரின் அழைப்பிதழ் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K