சவால் விட்ட காயத்ரி ரகுராம்: முடங்கியது ட்விட்டர் கணக்கு!
இந்து மதத்தை விமர்சிப்பவர்களுக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருந்த நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. திருமாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம் அவரை பற்றி அவதூறான வார்த்தைகளை உபயோகித்தார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் காயத்ரி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனக்கு திருமா கட்சியை சேர்ந்த சிலர் அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாக காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை எனவும், இந்து மதம் குறித்து விவாதிக்க விரும்பினால் நேரில் தன்னை சந்திக்கலாம் என்றும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. விசிகவினர் தொடர்ந்து ரிப்போர்ட் அடித்ததால் அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என சில ஊகங்கள் வலம் வந்தாலும், கணக்கு முடக்கத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை.