1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (17:55 IST)

ராயப்பேட்டை நான்கு பெண்கள் கொலை : பகீர் தகவல்கள்

சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் மனைவி பாண்டியம்மாள் (38)., பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த சில தினங்களாக இவர்களது வீடு பூட்டியே இருந்தது. வீட்டின் உரிமையாளர் சீனிராஜிடம்  கேட்டபோது பதிலேதும் கூறாமல் வெளியே சென்றாராம்.


 

 
இந்நிலையில் சின்ராஜ் வீட்டில் இருந்து நேற்று நள்ளிரவு திடீரென்று துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
உடனே விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பாண்டியம்மாள், அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 4 பேரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மகள்களை சீனிராஜ் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
சின்ராஜ் பாண்டியம்மாளின் கணவர் கிடையாது. அதாவது, பாண்டியம்மாள் அவரின் கணவரை பிரிந்து காரைக்குடியில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு சின்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. 
 
அதன்பின் சின்ராஜ் “ நாம் கணவன் மனைவி போல் வாழலாம். உன்னுடைய மூன்று மகள்களையும் என் சொந்த மகள்கள் போல் பாவிப்பேன் என்று கூறி சம்மதிக்க வைத்து, காரைக்குடியில் இருந்த அவர்களை, சென்னை அழைத்து வந்து ராயப்பேட்டையில் குடி வைத்துள்ளார்.
 
ஆனால், சின்ராஜிக்கு திடீரென ஒரு வக்கிரபுத்தி ஏற்பட்டுள்ளது. அதாவது பாண்டியம்மாளின் மூத்த மகளை அடைய விரும்பியுள்ளார். இதை கேள்விபட்டு அதிர்ச்சியான பாண்டியம்மாள், அவரை வீட்டிற்குள் விடவில்லை. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இரவு வீட்டிற்கு சென்ற சின்ராஜ், மீண்டும் பாண்டியம்மாளின் மகளை திருமணம் செய்து வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் பாண்டியம்மாள் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, இரும்பு கம்பியால் பாண்டியம்மாளை தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். 
 
அதன்பின் அவரின் மூன்று மகள்களையும், ஒருவன் பின் ஒருவராக கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, வீட்டை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மெரினா கடற்கரையில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.