புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (09:33 IST)

எத்தன தடவ? மீண்டும் அதிமுகவில் இணைந்த திமுக பிரபலம்!

திமுகவிலிருந்து விலகி மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமிபாண்டியன்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதி கருப்பசாமிபாண்டியன். எம்.ஜி.ஆர் ஆட்சியில் தனது 25 வயதிலேயே ஆலங்குளம் எம்.எல்.ஏ ஆனவர் இவர். அதிமுக சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

திமுக நெல்லை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த கருப்பசாமிபாண்டியனுக்கு திமுக தலைமையோடு பூசல் ஏற்பட்டது. இதனால் 2015ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2016ல் அதிமுகவில் இணைந்து இரண்டு வருடங்கள் பணியாற்றியவர் சசிகலா, தினகரன் அதிமுகவை கைப்பற்றிய போது அதிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். தற்போது மூன்றாவது முறையாக திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
தனது ஆதரவாளர்களுடன் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த கருப்பசாமிபாண்டியன் பூங்கொத்து கொடுத்து கட்சியில் இணைந்துள்ளார்.